Saturday, April 14, 2012

மக்களவையில் எழும்பிடும் மகத்தான குரல்! -தாய்ச்சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துர் ரஹ்மான் சாஹிப்

மிழ் இஸ்லாமிய சமூகம் குறித்து மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் குரல் என்று சொன்னால் இந்நாட்களில் அது நமது தாய்ச்சபையின் பிரதிநிதியாய் விளங்கும் வேலூரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்களுடையது என்றே நடுநிலையோடு அரசியலை உற்று நோக்கும் யாவரும் சற்றே தயக்கமின்றி கூறிடுவர்.


ஆனால், ஒளிவுமறைவின்றி இங்கே சொல்ல வேண்டுமென்றால் எவ்வளவு தான் நமது சமூகத்திற்காக அதன் பாதுகாப்பிற்காக அதன் உரிமைக்காக தனது அயராத சேவையால் அழகான அணுகுமுறையால் தாய்ச்சபை முஸ்லிம் லீக் உழைத்துக் கொண்டிருந்தாலும், காயிதேமில்லத் காலம் தொட்டே இன்றுவரை அதன் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சாதுர்யமான மற்றும் சாத்வீகமான அணுகுமுறையால் சமூகத்தின் தேவைகளுக்காக போராடி எத்தனை எத்தனையோ விசயங்களை வென்றெடுத்து பெற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாலும் விசமிகளாய் இன்று சமூகத்தை துண்டாடி இயக்கங்கள் என்ற பெயரில் இதயமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தினரை பயன்படுத்தி பாழ்படுத்திவருவர்கள் அரசியலில் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் சோற்றில் முழு பூசணிச்காயை மறைப்பதைப் போல முஸ்லிம் லீக் சமூகத்திற்கு என்ன செய்தது..? என்ன குரல் கொடுத்தது..? என்ன பெற்று தந்தது…?  எங்களை பாருங்கள் நாங்கள்... போராடுவதை பாருங்கள்.. நாங்கள் கோசமிடுவதை பாருங்கள்.. என படம் காட்டி அரசியலோ அல்லது நேற்றைய நிகழ்வுகளோ தெரியாத பாபப்பட்ட கூட்டத்திடையே ஓர் மாயையை உண்டாக்கி கொண்டிருக்கின்றனர், ஆனால் அந்த ஜம்பம் இனி பலிக்காது.

நேற்றைய காலத்தைவிட இன்று ஊடக ஒளி அதிகம். நேற்றைய காலத்தை விட நிகழ்வுகளை பதிவுகளாக ஆக்கிக்கொள்ளும் அறிவியல் வளர்ந்துவிட்டது. இனி யாரும் நமது தாய்சபையின் சமூக உழைப்பினையும் அதன் சரித்திரத்தையும் குறித்து கேள்வி கேட்ட முடியாது. அந்த வகையின் நடந்த நிகழ்வின் சரித்திர பதிவு தான் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப்.அப்துல் ரஹ்மான் அவர்களின் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஜானாதிபதியின் உரைக்கு நன்றி கூறும்  மிகச்சிறப்பான  உரை. அதன் மூலம் பொய் இயக்கங்களின் போலி முகத்தில் அச்சரேகைகளை ஓட விட்ட அதே சமயம் அவர் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான எல்லா அம்சங்களையும் அதில் உள்ளடக்கி பேசிய அம்சம் அவரின் சமூக அக்கரையையும் தாய்ச்சபையின் பிரதிநித்துவததையும் வெளிப்படுத்திக் காட்டியது.

பாராளுமன்றத்தில் எல்லா உறுப்பினர்களுக்கும் எல்லா தருணங்களிலும் வாய்ப்பு கிடைப்பது இல்லை.. இது போன்ற சூழ்நிலைகளில் வரும் வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி தங்களின் கருத்தை சமூகத்தின் சார்பாக பதிப்பது என்பது சமூகப்பொறுப்புள்ள உறுப்பினர்களின்  திறமைக்கு சவாலான ஓர் செயல் என்றே கூட சொல்லலாம். அந்த வகையில் தனக்கு வந்த வாய்ப்பை மிக அழகாக பயன்படுத்தி இன்றைய சூழலில் தான் சார்ந்திருக்கிற தமிழ் இஸ்லாமிய சமூகத்திற்கும் மற்றும்  தமிழ் சமூகத்திற்கும் வேண்டுவன எல்லாவற்றையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்து மன்றத்தில் பதியவைத்தார் அன்பர்.அப்துல் ரஹ்மான் என்றால் மிகையில்லை.

ஆம்! சென்ற மார்ச் 15ஆம் தேதி நன்பகல் 12.31லிருந்து தனக்கு சபாநாயகர் 'அப்துல் ரஹ்மான்' என பெயரை வாசித்ததிலிருந்து தனக்கு கொடுத்த 13.44 நிமிடங்களில் " இந்த நல்ல வாய்ப்பை எனக்கு கொடுத்ததில் தங்களுக்கு நன்றியை முதலில் உரித்தாக்க்குறேன்.. " என ஆரபித்து அவர் பேசிய 13.34 நிமிடங்களின் பேச்செல்லாம் நம் ஒட்டு மொத்த சமூகத்திற்கு எது தேவையோ அதுவே நிரம்பி இருந்தன. ஜனாதிபதி உரையில் இடம் பெற்ற அரசின் அறிவிப்பான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27விழுக்காடு இட ஒதுக்கீடில்  உள் இடஒதுக்கீடாக 4.5 விழுக்காடு சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்  அந்த இடஒதுக்கீடானது  இஸ்லாமியர்களோடு சேர்த்து கிருத்துவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் என அனைவருக்கும் சேர்த்து தான் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று அல்ல... மத்திய அரசே அமைத்த கோபால்சிங்(1984), சச்சார், ரங்கனாத் கமிட்டிகளெல்லாம்  இந்திய இஸ்லாமியர்களில் சமூக பொருளாதார நிலைமை மிக பின் தங்கியுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கின்றனர். ரங்கனாத் மிஸ்ரா கமிட்டி குறைந்தது முஸ்லிம்களுக்கு 10விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பரிந்துரைத்துள்ளது அப்படி இருக்க கொடுத்த 27விழுக்காட்டில் எல்லா சிறுபான்மையினருக்கும் சேர்த்து 4.5 என்பது சரியல்ல.. தமிழ் நாட்டில் கலைஞர் தலைமையிலான முந்தைய அரசு முஸ்லிம்களுக்கு மட்டும் 3.5 விழுக்காடு கொடுத்திருக்கிறது அதையே அதிகப்படுத்த நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் அப்படி இருக்கும் போது மத்திய அரசும் ரங்கனாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரையை நடைமுறை படுத்தி நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை மேன்மை படுத்த உதவேண்டும் என பாராளூமன்றத்தின் சுவர்கள் எதிரொலிக்க கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பேச்சில் உலக அரங்கில் அமைதி இழந்து தினம் தினம் பாதிப்பிற்குள்ளாகி வரும் பலஸ்தீனியர்களின் விடுதலையை ஆதரித்து பலஸ்தீனத்தின் பக்கம் நிற்கும் இந்தியா மறுபுறம் சில சக்திகளின் அழுத்தங்களுக்காக இஸ்ராயிலின் ஆதரவையும், அதன் படி  எந்த ஒரு முகாந்த்ரமும் இல்லாது பேச்சு, எழுத்து சுதந்திரங்களெல்லாம் இருக்கும் இந்நாட்டில் இஸ்ரேலிய எதிர்ப்பு என்ற ஒரு காரணத்திற்காக உண்மையான பல பத்திரிக்கையாளர்களை டெல்லி போலிசாரால் கைது செய்வது போன்ற செயல்கள் ஏன்? என‌ எதிர்த்தும் இந்தியா தனது நிலைப்பாட்டை இஸ்ரேலின் ஆதரவிலிருந்து விடுவித்து கொள்ள வேண்டும் எனவும் எந்த தயக்கமும் இன்றி பேசியவர் அந்த உரையினூடே அடுத்ததாக எடுத்த விசயம் இந்தியா பொருளாதாரத்தில் நிறைவடைய வேண்டும் என்றால் நடைமுறையில் இருக்கும் வங்கி முறைக்கு பதில் அரபுநாடுகளில் கையாண்டு அவர்கள் லாபம் அடைந்திருக்கும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கி முறையை இந்தியா பின்பற்ற வேண்டும் என்பதாகும். ஐரோப்பிய நாடுகளே தங்களின் வங்கி முறையால் தோல்வி கண்டு பின் அவைகள் இஸ்லாமிய வங்கி முறையை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது ஆதலால் இந்தியா இம்முறையை கையாண்டால் நிச்சயம் நம் பொருளாதாரம் ஓங்கும் இது உறுதி என ஆணித்தரமாக பேசி இறுதியாக அன்று முக்கிய பிரச்சனையாக இருந்த ஐ.நா-வின் இலங்கை எதிர்ப்பு தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனவும் அதன் விளக்கங்களை கூறி தன் உரையை நிறைவு செய்து பதியவைத்ததை.. திறமையாக பயன்படுத்தி சமூகத்தின் குரலாக ஓங்கி ஒலித்ததை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

இடஒதுக்கீட்டு பிரச்சனை, இஸ்லாமிய வங்கி முறை, பாலஸ்தீனத்திற்கான இந்தியாவின் ஆதரவு என பாராளுமன்றத்தில் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் குரலாக ஒலித்தததே இன்றயளவில் கூட ஹஜ்ஜுக்கு செல்லும் இந்திய இஸ்லாமியர்கள் பாஸ்போர்ட் பெருவதில் எழுந்த சிக்கலால் தங்களின் வாழ்க்கை கனவான இரவுப்பகலின் ஏக்க‌ தூஆவான ஹஜ்ஜு பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் இடுக்கண்களை கலைய அரசு இடைக்கால பிரத்யோக பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும் அதுவும் துரிதமாக கிடைக்க வேண்டும் என்றும் ஹஜ்ஜை பயணிகளூக்கான எல்லாவித நடைமுறை சிக்கலும் தீர்க்கப்பெற்று அவர்கள் தங்களின் இறுதிக் கடமையை செவ்வனே மனஅழுத்தம் இல்லாது நிம்மதியாக ஹாஜிகள் நிறைவேற்ற வழிவகை செய்யப்பட வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் எடுத்த முன்னெடுப்பில் வெற்றி பெற்றுள்ளாரே.. அரசே பதில் கொடுத்து கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி இருக்கிறதே என்று இவைகளை எல்லாம் தாய்ச்சபையின் சார்பாகத்தானே ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் அவர் முழங்கி இருக்கிறார். 

ஆனாலும் இங்கே சிலர் கீழான காழ்புணர்வுக்கு வசப்பட்டு இத்தனை பிரயத்தனங்கள் செய்யும் ஒரு சமூக பிரதிநிதியை..மனமுவந்து பாராட்டாது.. துஆ செய்யாது இவர் மூலம் சமூகம் தானே பலன் பெருகிறதென்றெல்லாம் சிந்தனைக்கூட செய்யாது.. அவர் மன்றத்தில் 'திமுக' வின் உறுப்பினராகத்தானே சுட்டப்படுகிறார் என்று சொல்கிறார்கள் என்றால் அரசியலில் சாதுர்யமான அணுகுமுறை என்றெல்லாம் உண்டென்பது உங்களுக்கு தெரியுமா..? அங்கனம் அணுகியதில் தானே சமூதாயத்திற்கு நாம் பிரதிநிதியை பெற்றோம்.! அன்றைய சூழலில் அவர் அவர்களின் சின்னத்தில் நின்ற காரணத்தால் அங்கனம் குறிக்கப்பட்டாலும் கூட அவர் சமூகத்திற்காக குரலெழுப்பியதில் அவர் மேலோங்கி நிற்கிறாரா இல்லையா..?  அப்படி அவர் திமுக-வின் பிரதிநிதியாக இருந்தால் இங்கனம் அவர் பேச முடியுமா இல்லை திமுக-உறுப்பினர்கள் தான் இவரின் சாராம்சங்களை என்றாவது பேசி இருக்கின்றனரா..? பாராளுமன்றத்தில் எத்தனையோ கட்சிகளை சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்களே அவர்கள் தான் இவர் போன்று சமுகத்தின் வாதங்களை எடுத்துரைத்திருக்கின்றனரா..? நடுநிலையளர்களே.. சமூக மாந்தர்களே இதை உங்களின் மன்சாட்சிக்கு முன் எடுத்து வைக்கிறேன்.  

எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான பிறகு தேர்வாகிவிட்டோம்  பிறகென்ன என்று தங்களின் வழக்கமான அரசியல் சதுரங்க விளையாட்டில் முனைப்பு காட்டி வருபவர்களின் மத்தியில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தான் ஒரு இந்திய இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக அவர்களுக்காக நாம் எதையாவது செய்தே ஆக வேண்டும்.. அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தான் பயன்படவேண்டும் என்றும்.. அரசியல் சூழ்ச்சிகளூக்கு மத்தியில் இஸ்லாமியர்களை கவசம் போல் எப்படியெல்லாம் காக்க வேண்டும் எனற சிந்தனையில் எப்போதும் இறைவனுக்கு பயந்து சமூக நலனுக்காய்செயலாற்றும் நமது தாய்ச்சபையின் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரை நல்லெண்ணம் கொண்டவர்கள்.. காழ்புணர்வுக்கும், கீழான அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் யாராயினும் பாராட்டவும், அவருக்காக துஆ- வும் செய்யவார்கள். அந்த மனநிலையில் நாடெங்கும் அவருக்கு பாராட்டும் துஆ-வும் பொழிகிறது.  நன்றிகளும் பல நெஞ்சங்கள் சொல்லிக்கொண்டு உள்ளது என்பதே உண்மை! 

வாழ்க தாய்ச்சபை.. வாழ்க அதன் பிரதிநிதித்துவம்!
வாழ்க நல்லெண்ணம்! வாழ்க எம் சமூகம்! 

இவண்.
வழுத்தூர்.ஜா.முஹையத்தீன் பாட்சா
மண்டல செயலாளர்
அமீரக காயிதே மில்லத் பேரவை ஃபுஜைரா.

No comments:

Post a Comment

Photobucket