Friday, April 6, 2012

சுருதியும் குறையாது; உறுதியும் குலையாது - பிறைமேடை தலையங்கம் - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!


எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!


நாம் இந்தியர் என்று சொல்வதில் பெருமிதம் உண்டு; இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டில் உடன்பாடு உண்டு; சமய நல்லிணக்கம் போற்றும் பன்முகத் தன்மையில் அரவணைப்பு உண்டு; பிறமத நம்பிக்கையாளர்களின் வழிபாட்டு முறைகளில் சகிப்புத்தன்மை உண்டு; மனிதர்களில் உயர்வு, தாழ்வு என்றில்லா சமத்துவம் உண்டு; ஏழை, பணக்காரன் எனும் வேற்றுமையற்ற ஒற்றுமை உண்டு; நாட்டைக் காக்கும் கடமையுணர்வில் எதையும் இழக்கும் தியாகம் உண்டு; இவை அனைத்தும் இஸ்லாம் காட்டித் தரும் பண்பாட்டு நெறிமுறை என்றாலும் உயிர்மூச்சான ஈமான் எனும் அழுத்தமான கொள்கைப் பிடிப்புக்கு சவாலாக எது வந்திடினும் அதிலே சமரசம் என்பதற்கே அணு அளவுகூட இடமில்லை என்பது நமது நிலைபாடு.



சாதாரணமாக ஊடகத் துறை, அரசியல் தலைவர்களின் நேர்காணல், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் என்று எதுவானாலும் நமது மார்க்க வரையரைக்குட்பட்ட சட்ட விதிமுறைகளின் தொகுப்பான ஷரீஅத் சட்டங்களுக்கு மாறாக எழுத்திலோ, பேச்சிலோ ஒரு சிறு கீரல் விழுவதைக்கூட அனுமதிக்கமாட்டோம். இன்னும் சொல்லப்போனால், சட்டம் இயற்றக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் எப்போதெல்லாம் நம்முடைய ஷரீஅத்திற்கு மாற்றமான கோணங்களில் சதிவலைகள் பிண்ணப்பட்டனவோ அப்போதெல்லாம் முஸ்லிம் லீகின் தலைவர்கள் கொதித்தெழுந்து முனை மழுங்கச் செய்திருக்கிறார்கள் என்பது மறைக்க முடியாத வரலாறு.


சிலர், சில சமயங்களில் ஷரீஅத்திற்கு நல்லது செய்கிறோம்; அதற்கு வலிமை சேர்க்கிறோம் என்று பலவீனப்படுத்துகிற காரியங்களில் இறங்குகிறபோதுதான் நமக்கு வேதனையாக இருக்கிறது. அவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி, விளக்கங்களை எடுத்துரைத்து அரசியல் ரீதியாக இப்படி அணுகினால்தான் பாதிப்பு ஏதும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று எச்சரிக்கை ஊட்டுகிற காரியங்களை நாம் செய்ய வேண்டியதாகிறது.


அந்த வரிசையில் சென்ற 22.3.2012 வியாழக்கிழமையன்று �முஸ்லிம் சட்ட அகாடெமி� என்று நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் சேர்ந்து இடம் பெற்றிருக்கிற அமைப்பினர் ஒரு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக என்னையும் அழைத்திருந்தனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தாலும் இந்த நிகழ்வில் எப்படியும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவசர அவசரமாக டில்லியிலிருந்து சென்னை வந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து நேரரக நிகழ்ச்சிக்குச் சென்று கலந்து கொண்டேன். ஷரீஅத் சட்டங்களை அடையாள எண்கள் கொடுக்கப்பட்ட (சிஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ) சட்டங்களாக மாற்றுவது குறித்த கருத்தரங்கம் அது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜனாப் அக்பர்அலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இன்ஜினியர் அஸ்கர் அலி என்கிற மும்பையைச் சேர்ந்த பிரமுகர் சிறப்புப் பேச்சாளராக இடம் பெற்று, இந்தத் திட்டத்திற்கு அவர் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி விவரித்தார். வழக்கறிஞர்கள், உலமாக்கள், படித்த அறிஞர் பெருமக்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க ஒன்று.


இது குறித்து பேசியவர்களெல்லாம் ஒரு சார்பான கருத்துக்களையே வழங்கியபடி நிகழ்ச்சி சென்றது. இன்ஜினியர் அஸ்கர்அலி தமது உரையில் பல்வேறு கருத்துக்களை வழங்கினாலும் முஸ்லிம் லீக் தலைவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமான கோணத்தையே அவரின் உரை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. மத்ஹபுகளைத் தனித்தனியே பிரித்து அவைகளுக்கேற்ப தனி வடிவம் கொடுத்துக் கொள்ளலாம் என்றார்; உலமாக்களை சமுதாய கலாச்சாரத்தின் உருவகம்தான் என்றார்; அவர்களை மாத்திரமே குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் விரிவுரைக்கும் விளக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது என்றார்; சில உலமாக்களின் ஃபத்வாக்கள் எனக் குறிப்பிட்டு கூட்டத்தில் பங்கேற்றோரை சிரிக்கும்படியும் பேசினார்; மொத்தத்தில் தமது இந்த முயற்சி என்பது ஏதோ இந்தியாவில் இருக்கும் அவரைப் போன்ற சில ஆற்றலர்களால்தான் முடியும் என்பது போன்ற தோரணையில் தமது உரையை ஆற்றி முடித்தார். நிறைவாக எனக்கும் உரையாற்ற வாய்ப்பு தரப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கு பெற்றதாலேயே நிகழ்ச்சியை நடத்துவோருக்கு ஏற்ப பேசிவிட முடியுமா? ஹக்கை எடுத்துரைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தாய்ச்சபை முஸ்லிம் லீகின் தலைவர்கள் வல்ல அல்லாஹ்வுக்கு மாத்திரமே அச்சம் கொண்டவர்களாக பல சவால்களைச் சந்தித்த நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. ஏற்கெனவே இதே முயற்சிக்கு நம்முடைய தலைவர்கள் ஆழ்ந்த பல கருத்துக்களை எடுத்துச் சொல்லி, சமுதாயத்தில் வீண் குழப்பங்களை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் இவை இவை இருக்கின்றன என்றெல்லாம் விளக்கி, ஷரீஅத்தில் கைவைத்து விபரீதத்தை உருவாக்கிவிட வேண்டாம் என்று நமது நிலைபாட்டை வெளிக்காட்டியதையும் மறுத்துவிட இயலாது. அதே நிலையினை வெளிக்காட்டும் வகையில் அன்றைய நிகழ்ச்சியில் நம்முடைய கருத்துக்களை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்தோம். நமது தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்கள் வழங்கிய பல்வேறு தகவல்களை உள்வாங்கிச் சென்ற நான் மிக, மிக விளக்கமாக எடுத்துரைத்தேன். மார்க்கச் சட்டங்களை அணுகும்போது அவைகளைப் பற்றிய ஞானமும், எடுத்துரைக்கும் தகுதியும் கொண்ட சங்கைமிகு உலமாக்கள் மட்டும்தான் பொறுப்பாளர்களாக இருக்க முடியுமே தவிர மற்ற யாருக்கும் அந்த உரிமையை விட்டுத்தர முடியாது. உலமாக்களை சமூகக் கலாச்சாரத்தின் உருவகம்தான் என்று மிகச் சாதாரணமாகச் சொல்வதையோ, குர்ஆன் & ஹதீஸ்களுக்கு விரிவுரை தரும் தகுதி அவர்களுக்கு மட்டும் இல்லை எனக் கூறுவதையோ கொஞ்சம்கூட ஏற்கவியலாது; உலமாக்கள் அங்கீகாரம் தராத சட்டங்கள் மார்க்கச் சட்டங்களாக நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை; ஏதோ நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு சிஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ என்று சொல்லக்கூடிய அடையாள எண்கள் வகுக்கும் வேலையில் ஈடுபட்டு சமுதாயத்தில் வீண் குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று உரையாற்றி அமர்ந்தேன். வருகை தந்திருந்த பெரும்பாலானோர் மிகவும் வரவேற்றார்கள் என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. காரணம் முஸ்லிம் லீகின் தலைமை எக்காலத்திலும் சமுதாயத்தில் குழப்பங்கள் உருவாகுவதை அனுமதித்ததே கிடையாது.


இந்த நிகழ்ச்சியில் நம்முடைய வழக்கறிஞர்கள் அணி, மாநிலச் செயலாளர் திரு. ஜீவகிரிதரன் அவர்களும், நமது மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜனாப் காயல் மகபூப் அவர்களும் நிகழ்ச்சியில் இடம் பெற்றார்கள். ஒரு காலக்கட்டத்தில் ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், அந்த பெண்ணின் தலாக் விஷயத்தில் ஷரீஅத்திற்குப் புறம்பான தீர்ப்பைத் தந்தார். அப்போது பாராளுமன்றத்தில் வெகுண்டெழுந்து நமது தலைவர் முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் அவர்கள் பேசியதும், இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் ஷரீஅத் சட்டம் என்றைக்குமே நிலைத்து நிற்கக்கூடியது என்கிற வகையில் தனிநபர் மசோதாவையே நாடாளுமன்றத்தில் தாக்கள் செய்து சட்டமாக்கிய வரலாறு தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு உண்டு. அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியே நாடாளுமன்றத்தில் ��பெண்களுக்கு இத்தகைய அருமையான நீதி ஷரீஅத் சட்டத்தில் கிடைக்கிறது என்றால் அதையே நாட்டின் பொதுச் சட்டமாக ஏன் ஆக்கிவிடக் கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது�� எனச் சுட்டிக்காட்டியதை நாடாளுமன்ற பதிவேடு இன்றைக்கும் பறைசாட்டிக் கொண்டிருக்கிறது. பிறைநெஞ்சே!


நாட்டில் பொது சிவில் சட்டத்தை எப்படியாவது உருவாக்கிவிட வேண்டும் என்று துடித்தவர்கள் இன்றைக்கு சற்று அடங்கிப் போய் இருக்கிறார்கள் என்பது யதார்த்தம். நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிய கடும் எதிர்ப்பும், சுடும் உரைகளும் அதற்குக் காரணமாய் இருந்தன என்பது நாடறிந்த விஷயம். ஆனால், இப்போது நம்மவர்களே ஷரீஅத் சட்டங்களில் கைவைத்து நல்லது செய்கிறோம் என்கிற பெயரில் புயலை உருவாக்கிவிடுவார்களோ என்கிற ஐயம் எழுகிறது. எதுவானாலும் சரி; ஷரீஅத் சட்டம் என்பது நமது உயிர் மூச்சு. இதைப் பற்றிய கருத்துரை வழங்குவதற்கு உலமாக்கள் இடம் பெற்றிருக்கிற �முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்� என்கிற அகில இந்திய அமைப்பே தகுதியும், தகைமையும் வாய்ந்தது; வேறு எவரையம் அனுமதிக்கவியலாது என்பதே தாய்ச்சபை முஸ்லிம் லீகின் நிலைபாடு. இதில் கொஞ்சமும் சுருதியும் குறையாது; உறுதியும் குலையாது.


இன்ஷா அல்லாஹ்.


அன்புடன்
எம். அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்.

No comments:

Post a Comment

Photobucket