இந்திய பாராளுமன்றம் அமைந்ததில் இருந்து தற்போதைய 15 வது பாராளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் தொடர்ந்து பிரதிநிதித்துவம் பெற்று வருகிறது என்று பாராளுமன்ற 60-ம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுதுறை இணை அமைச்சருமான, இ.அஹமது சாஹிப் குறிப்பிட்டார்.
அவரது உரை வருமாறு-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை பாராளுமன்றத்தில் நான் பிரதிநிதித்துவம் செய்கிறேன். முதல் பாராளுமன்றத்தில் அதாவது 1952-லிருந்து நாங்கள் இன்றைய தினம் வரை பாராளு மன்றத்தில் தொடர்ந்து பிரதிநிதிகளாக இருந்து வருகிறோம் என்பது எங்களுக்கு பெருமையையும், திருப்தியையும் அளிக்கிறது.
முதல் பாராளுமன்றத்திலிருந்து நடப்பு 15-வது பாராளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் தொடர்ந்து பிரதிநிதித்துவம் அடைந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
எண்ணிக்கை ரீதியில் நாங்கள் பலம் குறைந்த கட்சியாக இருக்கலாம். ஆனால், எங்களது அரசியல், செயல் திட்டங்கள், அணுகுமுறை, பங்கேற்பு மற்றும் செயல்பாடு ஆகியவை பெரிய அளவில் இருந்திருக்கின்றன. அதை நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் பாராட்டியிருக்கின்றன.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு. இந்திய சுதந்திர போராட்டத்தை வழிநடத்திய கீர்த்திமிக்க தலைவர்களும் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க பாடுபட்ட தலைவர்களும் நமது தேசத்துக்கு ஜனநாயகம் தான் பொருத்தமான ஆட்சி முறை என்று நினைத்தார்கள். மிகச் சிறந்த எம்.பி காயிதே மில்லத்
எங்களது மிகப் பெரிய தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் இந்த அவையின் சிறந்த உறுப்பினராக திகழ்ந்தார். அவர் நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதாக ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி உள்பட தேசித் தலைவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாக்கும்படி சிறுபான்மை யினருக்கு கற்பித்த தலைவர் அவர்.
1948-ல் எங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருப்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.
முதல் பாராளுமன்ற தேர்தலிலிருந்து 15-வது பாராளுமன்ற தேர்தல் வரை எங்களை தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற மக்களாட்சி தத்துவத்தை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்பவர்கள்.
மக்களாட்சியில் வன்முறை, சமுதாய ஒற்றுமையின்மை இவை போன்ற எண்ணங்களுக்கு இடமில்லை. மதச்சார்பற்ற மக்கள் ஆட்சியில் பாராளுமன்றம் பெரிய அமைப்பாகும். உலக பாராளுமன்ற வரலாற்றில் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. நாம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளால் மதிக்கப்படுகிறோம். இதுகுறித்து நாம் அனைவரும் பெருமை அடையலாம். சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்களின் தேவைகளையும், விருப்பங்களையும் ஜனநாயக ஆட்சி முறையில்தான் பூர்த்தி செய்ய முடியும். பன் முகத்தன்மை கொண்ட நாடு
இந்தியா என்பது மிகப் பெரிய பன்முகத்தன்மை கொண்டது. இங்கே நாம் பல மதங்களை பெற்றிருக்கிறோம். பல மொழிகளையும் துணை கலாச்சாரங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள் மற்றும் பல்வேறு கொள்கை சித்தாந்தங்களை கொண்டிருக்கிறோம். அப்படி பன்முகத்தன்மை கொண்ட நாடு ஒருங்கிணைந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு ஜனநாயக ஆட்சிமுறையே காரணம்.
நமது அரசியல் வழிகாட்டி பண்டித ஜவஹர்லால் நேரு, நவீன இந்தியாவை நிர்மாணித்தவர் ஆவார். அவர் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை எப்போதும் ஒருநிலைப்பாடாக கொண்டிருந் தார். நாம் பல மதங்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்களை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் ஒரே இந்தியர்கள். எனவே, தேச ஐக்கியத்தை பாதுகாப்பதில் நம் அனைவருக்கும் புனிதமான கடமை இருக்கிறது.
நாம் தொடர்ந்து ஜனநாயக கோட்பாடுகள் குறித்து பேசி வருகிறோம். அதற்கு இந்த பாராளுமன்றம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி இந்தியாவிற்கான பல்வேறு சட்டங்களை மக்களுக்காக இயற்றி வருகிறது. கடந்த 21 ஆண்டு களாக தொடர்ந்து நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். இங்கே 21 ஆண்டுகள் உறுப்பினராக இருந்ததற்கு முன் பதினேழரை ஆண்டுகள் கேரள சட்டசபை உறுப்பினராக பணியாற்றியிருக்கிறேன்.
இந்த நிலையில், நமது மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியதாக பாராளுமன்றம் வழங்குவதை நான் உணர்கிறேன். இந்த மாபெரும் அவையில் மவ்லானா அபுல் கலாம் ஆஸாத், எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.
இந்த அவையில்தான் மறைந்த பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் நாங்கள் அரசு சேவைகளில் நியமனங்களை கோரினோம்.
ஆனால், எங்களுக்கு எமாற்றம்தான் கிடைத்தது என்று சொன்னோம். இதைக்கேட்டு பண்டித்ஜி மிகவும் சஞ்சலப்பட்டார். எங்கள் குறையை நிறைவு செய்ய பண்டித்ஜி நடவடிக்கை எடுத்தார். அப்படிப்பட்ட ஒரு பாராளுமன்றத்தில் நாங்கள் உறுப்பினராக இருக்கிறோம். இந்த உண்மைக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அதே நேரத்தில் இன்னும் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன வென்று உணர்ந்திருக்கிறோம். இந்த தேசத்தில் சமூக, மத குழுக்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் வளர்ச்சித் திட்டங்களில் முழுமையாக பயன்பெறவில்லை. அதேநேரத்தில் நமது அரசியல் சட்டம் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. சமூக, பொருளாதார, சமத்துவத்திற்கும் நாட்டின் வளத்தை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் அரசியல் சட்டம் வழிவகை செய்கிறது ஆனால், கடந்த 60 ஆண்டுகளாக நமது சிறந்த முயற்சிகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் சரிசமமான உரிமையும், பங்கும் கிடைத்துள்ளதா? என்றால் இல்லை. துரதிருஷ்டவசமாக இந்த நிலை உள்ளது. உரிமையிழந்த அடித்தள மக்களும் இருக்கிறார்கள். சிறுபான்மை மக்கள் மதிக்கப்பட வேண்டும்
சிறுபான்மை மக்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையாகும். சிறுபான்மையின மக்கள் மதிக்கப்பட வேண்டும் என்று திரு எல்.கே. அத்வானி கூறியிருப்பதை கேட்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். சிறுபான்மையினர் என்பவர்கள் அரசியல் ரீதியான சிறுபான்மையினர் அல்லர். மொழி ரீதியான சிறுபான்மையினர், மத ரீதியான சிறுபான்மையினரும் சிறுபான்மையினர்தான்.
எனவே, அனைத்து சிறுபான்மையின மக்களும் மதிக்கத்தக்க மதிப்பீட்டை இந்தியா கொண்டிருக்க வேண்டும் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினர்களின் கோரிக்கைகளை இரக்கத்தோடும், பொறுமையோடும் கேட்க வேண்டும். அப்படியில்லையென்றால் நாம் ஒரு ஜனநாயக ஆட்சியில் வாழ்கிறோம் என்ற பெருமையை கொள்ள முடியாது. ஆனாலும்கூட, பல நாடுகளைவிட நாம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம் .
இன்றைய தினம் 23 கோடி மக்கள் பசியோடுஉறங்குகிறார்கள் என்றால் எங்கே கோளாறு நிகழ்ந்திருக்கிறது என்று நாம் கவனத்தோடு பரிசீலனை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஒருபிரிவு மக்கள் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு வளர்ச்சியின் பங்கு போய்ச் சேர வேண்டும். எனவே, நாட்டின் நிர்மாண திட்டங்களில் அனைவரும் பங்கு பெற வாய்ப்பளிக்க வேண்டும். அவர்களுக்குரிய உரிமை நிறைவு செய்யப்பட வேண்டும்.
சிறுபான்மையினர் உள்ளிட்ட வாழ்வின் விளிம்பில் வறுமையில் வாடும் பிரிவினரும், நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தை இந்த60-வது ஆண்டு விழாவில் நாம் அனைவரும் மனதில் கொண்டு அதை எதிர்கால பாராளுமன்ற வழிகாட்டு முறையாக நமக்கு அமைய வேண்டும்.
அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளை சிறுபான்மையினருக்கு தாருங்கள்
சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து அரசியல் சட்டம் மிக தெளிவாக கூறுகிறது. அதை நாம் மதிக்க வேண்டும். அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை சிறுபான்மையினருக்கு அமுல்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் சட்டம் நிலை நிறுத்தப்பட வேண்டும். அதன் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும். அதை நாம் செய்யா விட்டால் ஜனநாயகத்திற்கு நாம் நீதி வழங்க முடியாது. இந்தியாவின் ஒற்றுமையை கடைபிடிப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று இங்கே எனது நண்பர்கள் வெளிப்படுத்திய கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில், பல லட்சம் மக்கள் இந்த நாட்டில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடிக் கொண்டிருப்பதை போக்கும் வகையில் பாராளுமன்றம் தேவையான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதில் தங்களது நிபுணத்துவத்தை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
சிறுபான்மையினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதுபற்றி சிலர் பரப்பி வரும் பொய்ப் பிரசாரத்தை மக்கள் முறியடிப்பார்கள். அப்படி பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் இங்கே சிறுபான்மையினருக்கு கலாச்சார ஒற்றுமை இல்லை, கலாச்சார பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அது தவறு.
இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். இங்கே இந்து கலாச்சாரம், இஸ்லாமிய கலாச்சாரம், கிறிஸ்துவ கலாச்சாரம், புத்த கலாச்சாரம் என்ற பல்வேறு கலாச்சாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டி ருக்கிறது. அவை அனைத்தும் சேர்ந்து இந்திய பண்பாடாக விளங்குகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய சிறுபான்மை முஸ்லிம்களின் கலாச்சாரம் டெல்லி செங்கோட்டை போல் பலமாக உள்ளது.
குதுப்மினார் போல் உயர்ந்து காணப்படுகிறது; தாஜ்மஹால் போல் அழகாக வர்ணமிக்கிறது. அப்படிப்பட்ட கலாச்சாரம் இந்தியாவில் அழிந்து போக பெரும்பான்மை சமூகத்தினர் விரும்ப மாட்டார்கள். இதில்தான் இந்தியாவின் ஒற்றுமை, கலாச்சார ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், இயற்கையான ஒற்றுமையாக அமைந்திருக்கிறது.
இந்த நல்ல தருணத்தில் தேசிய ஐக்கியத்தை காப்பாற்றுவதில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஓங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக! மேற்கண்டவாறு இ.அஹமது சாஹிப் பேசினார்.
No comments:
Post a Comment