Thursday, November 3, 2011

புகழ்மிக்க கட்டிடங்களைத்தான் மருத்துவமனைகளாக மாற்ற வேண்டுமா?- காயல் மகபூப்

இந்திய ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் என்பது வழக்கமான ஒன்று. ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு பதிலாக இன்னொரு அரசியல் கட்சி பொறுப்பேற்றதும் முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களெல்லாம் முடக்கப் படுவதும், சாதனைகள் சிதைக்கப்படுவதும் தமிழகத்தில் மட்டுமே நடைபெறும் விசித்திர காட்சிகளாக இருக்கின்றன. 

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மாறி கடந்த மே மாதம் 16-ம் தேதி செல்வி ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.திமு.க. ஆட்சி பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இந்தியப் பிரதமரே 2010 மார்ச் 13-ல் திறந்து வைத்த புதிய தலைமைச் செயலகம் மாற்றியமைக்கப்பட்டதும், புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த செம்மொழி தமிழாய்வு நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டதும் கடும் விமர்சனத்திற்கு ஆளாயின.

தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் என்றும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேரில் பார்வையிட்டு வியந்து பாராட்டியதுமான இந்த நூலகம் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.170 கோடியில் 9 மாடிகளுடன் உருவாக்கப்பட்டு 15-09-2010-ல் அன்றைய முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டு இன்று 12லட்சம் புத்தகங்களோடு காட்சியளிக்கிறது.

இம்மாபெரும் நூலகம் சென்னைக்கு பெருமை சேர்ப்பதோடு, ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பயனை தந்துகொண்டிருக்கிறது.

மருத்துவமனைகள் நாட்டுக்கு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. மருத்துவமனைகள் அதற்காகவே திட்டமிடப்பட்டு அந்த வடிவமைப்பில் கட்டப்பட்டு செயல்பட்டால்தான் அது பயனளிக்கும்.

சென்னை புதிய தலைமைச் செயலகமோ, கோட்டூர் புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமோ அப்படி கட்டப்பட்டது அல்ல. அவை அந்தந்த காரியங்களுக்காக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டவை.

மருத்துவமனைகள் கட்டுவதற்கு எவ்வளவோ இடங்கள் இருந்தும். வேண்டுமென்றே இப்படிப்பட்ட புகழுக்குரிய இடங்களை மருத்துவமனைகளாக மாற்ற அறிவிப்பு செய்வது நாட்டு மக்களை வேதனை அடையச் செய்வதாகும்.

இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.

No comments:

Post a Comment

Photobucket