Friday, July 15, 2011

சமூக இதயமே நீயேன் நின்று போனாய்..?

இரங்கற்பா:


இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர் மர்ஹூம். அல்ஹாஜ் சிராஜுல் மில்லத் அ.கா.அ அப்துல் ஸமது M.A, Ex MLA, Ex.Mp அவர்கள் 11-04-1999 –ல் இறையடி சேர்ந்தபோது எழுதியது.



பரிதவிக்கிறது மனது
பாரம்பரியத்தை காத்து வந்த

பாரம்பரியமே  நீ

பரமனோடு சேர்ந்து விட்டாயென்று

பரபரப்பாக காற்றலைகள்

பரப்பிய துக்கம் கேட்டு

பரிதவிக்கிறது  மனம்

பதறுகிறது  நம் மரபே

அருந்து போனதோ வென

உள்ளம் உருகி நீர்க்கிறது.



எழுபதைத் தாண்டிய இளைஞனே  நீ
உழைத்து உழைத்து

உயிர் தேய்ந்தது போதும்

உறங்கு நிம்மதியாய் என்று

உத்தரவு வந்தததோ..!



ரோஜாவைப் பார்த்து
உன்முகம் பார்த்தால்

ராஜாவே நும்முகமே அழகென்று

அகிலமே கூறிய அழகனே!



அதென்ன சூட்சுமம்
உன் தமிழ் மட்டும்

நீ அம்பாய் எய்தாலும்

மல்லிகையாய் மாறி தூவுமே..



தமிழுக்கே நாவினிக்கும்
சக்கரைத் தமிழே

எத்தனை மேடைகளில் உன்

ஒய்யாரத் தமிழ்

தென்றலாய் உலா வந்தது அந்த

ஆன்மமருத்துவ தென்றலின்

அற்புதம் தெரியாமல் யார்..

இனி உன்னை பேசாமல் செய்தது ?



தீவரவாதம்..மதவாதம்.. இனவாதம்..
பேசிடுவோர் நடுவினில்..

மிதவாதத்திலும் இதவாதமே - என்

கொள்கையென பக்குவ அரசியல் நடத்திய பண்பாளா!


எத்தனையோ பேர்

கல்லெறிந்து.. சொல்லெறிந்து.. - உன்

உள்ளத்தில் முள்ளெறிந்த தருணங்களில் -நீ

புன்னகைப்பூவின் மலர்ச்சரம் கொண்டு

அவர்களுக்கே மணிச்சுடர் ஓலையில்

மாலையிடுவாய்.

அவரே நாணிடுவர்..!

ஏனிந்த பிழைசெய்தோமென..!



நீ தாக்கி பேசநினைத்து பேசிய பேச்சே

மற்றவர்களை வருந்தச்செய்யாது

திருந்தத்தான் செய்யும் எனும்போது..

நீ விட்ட மூச்சா கெடுதல் செய்யும் - இன்னும்

கொஞ்ச நாள் இருக்கச்செய்வதனால்  அந்த

விஞ்சும் அருளாளனுக்கு குறைவா வரும்..


அவன் ஏன் இப்படி

அவசர அவசரமாய் - எங்கள்

அன்பை அழைத்துச்சென்றான்

அவனுக்கு ஆசையோ என்னவோ

அமரர்கள் மத்தியில் அருந்தமிழ் பேசச்செய்ய!



பேர் சொல்லும்
பெரும்படைத் திரட்டி

வடநாட்டுச் சிங்கங்களை

மேடையிலே இருத்தி

ஊர்போற்ற உலகு போற்ற

சென்னை சீரணியரங்கில்

சீர்மிகு எழுச்சி மாநாடு

சிறப்பாய் நடத்தி..

திடமான நெஞ்சனே

கொடவேண்டும் எம்மவருக்கு

இடஒதுக்கீடு என - நீ

முதல்வர் முன் - அவர்

மூளை துறுவிடும்

கூவல் தந்த தலைவா..!



காயிதே மில்லத்திற்கு பிறகு  நீ
இருக்கிறாயென நாங்கள்

நம்பிக்கை வைத்திருந்ததில்

நச்சுப் பாம்பு கொட்டியேன் எம்மை

அதிக வேதனையிலிட வேண்டும்



இனி எப்படி பார்ப்போம்
என் இதயத் தலைவரை

புலம்ப விட்டு போன எம் தலைவா

எழுப்பவியலா உறக்கத்தில் ஏன் ஆழ்ந்தாய்?



ஓ..! என் சமூக இதயமே..
உன் துடிப்பில் தானே

நாங்கள் இயங்கி வந்தோம்

எங்களை ஜடமாக்கி

நீ யேன் நின்று போனாய்..?
- ஜே.எம்.பாட்ஷா-

1 comment:

  1. சிந்தனைச்சுடர் சிராஜுல் மில்லத் நமது சமூகத்திற்கான ஈடில்லா தலைவர் பெருந்தகை.. அவர் ஒப்புயர்வற்ற அற்புத தலைமைக்கு சொந்தக்காரர் அவர் பிரிவினை தாங்காது நான் இயற்றிய இரங்கற்பாவை இடுகையிட்டமைக்கு நன்றிகள் பல.. வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா- துபை

    ReplyDelete

Photobucket